Saturday, August 20, 2005

மீகாரம்

Don't say we didn't warn U Londoners

லண்டன், ஆக. 12: லண்டன் ஆடம் தெருவில் பஸ்ஸில் பயணம் செல்வதற்காக சென்ற ஒருவரை போலீஸ் சுட்டு வீழ்த்தியது.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:

லண்டன் கொவெண்ட் கார்டென் அருகே வசிப்பவர் ரவி. இவர் லூபஸ் காபிடலில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். காலை எட்டு மணியளவில் ஆக்ஸ்ஃபோர்ட் சர்கஸ் பேருந்து நிலையத்துக்கு இவர் விரைந்தார். லண்டன் பங்குச்சந்தை திறப்பதற்கு முன் அலுவலகம் செல்வதற்காக ஓடிக் கொண்டிருந்தார். அப்பொழுது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.


ரவியை நேற்று மாலை அமெரிக்காவிலிருந்து தொலைபேசி அழைத்தது. கல்லூரி சகா பவன் அழைத்திருந்தான். பாஸ்டனை விட்டுக் கிளம்புகிறான். அவனையும் திரும்புமாறு சொல்லிக் கொண்டிருந்தான். பவனின் கம்பெனியே கார், வீடு எல்லாம் கொடுக்கிறது. மாதத்திற்கு ஒரு லட்ச ரூபாய் சம்பளம். சென்னையில் வசிக்கும் பெற்றோரின் அருகாமை கிடைக்கும் என்பதால் இந்தியாவுக்கும்; தூரம் தொடர்ந்தால் பாசம் மிகும் என்பதால் பெங்களூருக்கும் செல்கிறான்.

ரவியையும் இந்தியாவுக்கு வந்துவிடுமாறு அழைத்தான்.

ஆகஸ்ட் 15
என்னுடைய கனவுகள் இந்தியாவுக்கு செல்பவை. தூக்கத்தில் வரும் கனவுகளை சொல்கிறேன். நிஜத்தில் லண்டனே பிடித்திருக்கிறது.

இன்று சுதந்திர தின விடுமுறை.

குடும்பத்துடன் ஸ்பென்ஸர் ப்ளாசாவுக்கு சென்றிருப்பேன். பஃப் சாப்பிடுவேன். அங்கிருந்து தேவி காம்ப்ளெக்ஸில் 'பூம்' அல்லது '2 Fast 2 Furious' பார்ப்பேன். இரவு பிட்ஸா ஹட்டில் தந்தூரி சிக்கன் பிட்ஸா. மின்மினிகளும் மெர்க்குரி விளக்குகளுக்கும் கீழே காமராஜர் சாலையில் மாருதியோடு திருவான்மியூருக்குத் திரும்புவேன். கொஞ்ச நேரம் ரிமோட் விளையாடி சேனல்களோடு மேலிருந்து கீழிறங்கிவிட்டு, மொட்டை மாடியில் தூங்குவேன்.

ட்ரெயினுக்கு லேட்டாச்சு. அலாரம் கேட்டு தூக்கம் கலைந்தேன். எழுந்து கொண்டு எழுதுவதை நிறுத்திவிட்டேன்.

ஆட்ரியானாவுக்கு புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும். புகைப்படங்களை பார்ப்பது ரொம்ப விருப்பம். ஆனால், ரவியிடமோ ஆங்கிலப் புத்தகங்கள் மட்டுமே இருந்தது.

புத்தக அலமாரி ஆறடி இருக்கும். ஜன்னலோரம் இருப்பதால் தூசி படிந்தவை. நான்கு அடுக்குகள் கொண்டது. சில புத்தகங்களில் கை பட்ட தடம் தெரியும். மற்றவைகளில் பிற புத்தகங்களோடு உரசாத இடமெல்லாம் வெளிர் நிறத் துகள் நிறைந்திருக்கும். தடிமனான புத்தகங்கள். அனேகமாக எல்லாவற்றிலும் எழுத்துக்கள் மட்டுமே அணி சேர்ந்திருக்கும். பின்னட்டையில் சேலை கட்டி, கோட்-சூட் போட்டுக் கொண்டு, விதவிதமாக மனிதத் தலைகள்.

இந்தப் புத்தகத்தில்தான் சோகமான சிறுமி இருந்தாள். இந்த கரிமுகத்துக்கு பதில் தன்னைப் போட்டிருக்கலாம். பத்தாவது வயதில் மெக்ஸிகோவில் எடுத்த புகைப்படங்களில் ஆட்ரியானா இன்னும் அழகாக இருந்திருப்பாள்.
"சீன் அவுட்லைன் எழுதியது போதும் ரவி."

"ஏண்டா... டைரக்ட் செய்ய சான்ஸ் கிடைச்சுடுச்சா?"

"அதை விட சூப்பர் சான்ஸ். பாலச்சந்தர் செய்யிற புது சீரியலுக்கு அஸிஸ்டெண்டா இருக்க ஒத்துண்ட்டேன். நீயும் வந்துரு. ஒழுங்கா இருந்தா கொஞ்ச நாள் கழிச்சு நீயும் அஸிஸ்டெண்டாயிடலாம்."

"வேணாண்டா... நான் வெயிட் பண்ணப் போறேன். விஸ்-காம் வேஸ்ட்டாக்கறதுக்கு இன்னும் மனசு வரலைடா. வெஸ்ட் விங் மாதிரி ஒரு சப்ஜெக்ட் எழுதிண்டு இருக்கேன். விஜய்யில் மட்டும் சான்ஸ் கிடைச்சாப் போதும். பிச்சுகின்னு போயிடும். இப்ப இருக்கிற மாதிரி அழுது வடியாம, சமூகத்தை மட்டும் மேலோட்டமா பார்க்காம..."

"அட போடா... நீ உருப்பட மாட்ட. மேலோட்டமா என்று கெட்ட வார்த்தையில் திட்டற வரைக்கும் உனக்கு சான்ஸ் கிடைக்காதுடா ரவீ".

ரவிக்கு விமர்சனம் தேவை. தன் கதை 'எப்படியிருக்கிறது' என்றால் முகநக நட்பு வாழ்த்துகிறது. ப்ளாகர்.காம் சென்று 'மீகாரம்' என்னும் பெயரில் புதிய வலைப்பதிவைத் தொடங்கினான். சொந்த ஊர், பெயரை மறைத்து பொய் சொல்லி படிவங்களைப் பூர்த்தி செய்தான். ஈழப் பிரச்சினையை ஆட்ரியானாவை பிண்ணணியாக வைத்து எழுதிய கதையை மீகாரம் வலைப்பதிவுகளில் இட்டான்.7 Comments:
சேஷாத்ரி said...
உங்கள் கதை நீளமாக உள்ளதால் பொறுமையாகப் படித்து பின் கருத்து சொல்கிறேன்.

3:05 AM
ரவி said...
சேஷாத்ரி, அவசியம் படித்து பின்னூட்டமிடவும். அட்வான்ஸ் நன்றிகள்.

4:52 AM
Bala said...
கௌதமி என்னும் பெயரைத் தவிர இலங்கைக்கும் இந்தக் கதைக்கும் வேறு சம்பந்தமே இருப்பதாகத் தெரியவில்லை. கோர்வையாக ஒரு விஷயத்தை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு எழுதிப் பழகுங்கள்.

10:09 AM
அனில் said...
வித்தியாசமான ட்ரீட்மெண்ட். ஆனால், மனதில் பதிய மாட்டேன் என்கிறது. நிறைய சொல்ல ஆசைப்படிருக்கிறீர்கள். அதனால் அலைபாய்கிறது. சில மணி நேரக் காலகட்டத்திலேயே சிறுகதை என்பது முடிந்துவிட வேண்டும். உங்களுடையது அரசியல், வரலாறு, புனைவு, ஆசிரியர் எண்ணங்கள், என விரிவதால் சிறுகதை என்று வகைப் படுத்த இயலாது. பல வருடங்களை சுருக்குவதை விட்டுவிட்டு, இதை ப்ளாட்டாக எடுத்துக் கொண்டு குறுநாவலாக்குங்கள்.

10:12 AM
அனில் said...
---ப்ளாட்டாக எடுத்துக் கொண்டு குறுநாவலாக்குங்கள்----

PLOT அல்ல... கரு என்று அர்த்தம் கொடுக்கும் plot. :-)

10:45 AM
Anonymous said...
The stuff you write is utter crap. Please read some quality stories and literature before attempting to write. Don't throw up shit on us by your half-baked stuff. Please show restraint by waiting couple of months after the first write-up, when writing stories. Otherwise, you will get only these dumb-ass narration style.

3:21 AM

ரவிக்கு எதிர்சமூக மனநோயோ (Antisocial personality disorder APD) எதையும் அனுசரித்துப் போகாததால் (Adjustment disorder) அவனுக்குள் எழுந்த உள்மனப் போராட்டமோ சமுதாயத்துக்கு எதிரியாக சித்தரிக்க ஆரம்பித்தது.

இதை மனதில் கொண்டுதான் ரவி கதையை ஆரம்பித்தான். தனது கதையை விட சிறந்த தொலைக்காட்சித் தொடரை இனி செய்ய முடியாது என்று உறுதியாக நம்பினான். கூடிப் பழகும் இயல்புமில்லாமல் குமுகாயத்தின் மேல் கொண்ட மனக்கிலேசங்கள்தான் எழுதியதை நடத்திக் காட்ட உறுதுணையாக இருந்தது. கனவு போல எழுதிய கதையை செயல்படுத்தும் வாய்ப்பு அவனுக்கே கொடுக்கப்பட்டது.

நாயகனாக உருவகித்த நாடகத்தை நிஜமாக்கும் வாய்ப்பு அவனுக்குத் தரப்பட்டது. எல்லாம் தூங்கியெழுவதற்குள் நடந்து விடுகிறது. தூங்கும் எட்டு மணி நேரங்களும் பொன்னான மணித் துளிகள். விரயமாகக் கூடாத தருணங்கள் நிறைந்தவை. சண்டை நிகழாத, மௌனமான அமைதிப் பள்ளத்தாக்கில், தான் சொல்வதெல்லாம் நடக்கும் அற்புதங்கள் கொண்டவை. அந்த எட்டு மணி நேரத்தில்தான் அவனுடைய நிஜ நாடகம் பிபிசியில் ஒளிபரப்பானது.
எனக்கு வந்த கார்டில் இந்த 'அரட்டை'யை ஐம்பது அட்டைகளில் எழுதி அஞ்சலிடுமாறு ஆணையிட்டிருந்தார்கள். இதோ... இங்கு தட்டச்சி, ஐநூறு பேர்களுக்கு மேல் பார்வையிடும் வலைத்தளத்தில் ஏற்றிவிட்டேன். நீங்களும் உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு ஐம்பது பதிவு எடுக்காவிட்டால்...

sankar (8:27:23 PM): டேய்
meera (8:27:28 PM): எப்படிடா இருக்கே?
sankar: பர்ஸ்ட் க்ளாஸ்
meera: என்னுடைய ப்ளாக் பார்த்தியா
sankar: இல்லேம்மா
meera: மூதேவியில சூப்பரா சண்டை ஓடிட்டிருக்கு
sankar: அதே
meera: அத்த விடு
sankar: :>
meera: வேற என்ன மேட்டரு
sankar: நேத்து ஒருத்தன சுட்டாங்க இல்ல....
meera: :-S
sankar: என்ன முழிக்கறே
meera: போன்
sankar: :-w
meera: back
sankar: இன்று ஹெல்கிரவுண்ட் இங்கிலீஷ் பிளாகில் ஒரு சூப்பர் மேட்டர் பார்த்தேன்
meera: என்னது?
sankar: அவன் ltte supporter-ஆம்
meera: :-O
sankar: சந்திரிகா USA-வுக்கு base கொடுத்தாங்க இல்லையா?
meera: ஹ்ம்ம்
sankar: அதுக்கு பதிலடி கொடுக்கறதுக்கு அவன் லண்டன் வந்தானாம்!
meera: /:)
sankar: என்ன முழிக்கறே...
meera: பிரபாகரன் மட்டும்தானே செத்தான் :(
sankar: அதான்... அமெரிக்காவுக்கு எப்பவும் ஒருத்தர்தானே எதிரி... காஸ்ட்ரோ, சதாம், ஸ்லோபோதன், ஒஸாமா
meera: SL giving space to US is headache to India
sankar: ஆமா... இப்ப எப்பவுமே கொல்லைப்புறத்தில் அமெரிக்கா வேவு பார்த்துண்டிருக்கு
meera: சரி.... பஸ்ஸில் போனதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
sankar: சரியான *-:) நீ
meera: சொல்லு.... ஒன்பது மணி மீட்டிங்
sankar: இப்போ இலங்கையில் கஞ்சா பயிரிடறாங்களாம்... மிஸ்ஸைல் எல்லாம் விக்கறாங்களாம்... எல்லாமே அமெரிக்கான்னு பேசிண்டு இருந்தாங்க!
meera: தெரிஞ்ச விஷயம்தானே
sankar: இதை இந்த 'ரவி' சீரியலுக்கு அவுட்லைனா எழுதியிருக்கான்
meera: அடப்பாவீ... கதைதானே விட்டிருக்கான்
sankar: அதை வெச்சுதான் அமெரிக்காவுக்கே ஐடியா வந்திருக்கு... நேத்திக்குதான் 'பெஹலா.காம்'-க்கு அதை முதன் முதலா எப்போ எழுதினான், பிபிஸிக்கு எப்பொழுது தாரை வார்த்தான் என்று விலாவாரியா ஈமெயில் போட இருந்தானாம்... ட்ராஃப்ட் 'ஹெல்கிரவுண்டில்' சுத்திண்டிருக்கு!
meera: என்னவோ போ... brb
sankar: சரி


கொல்லப்பட்டது கதையல்ல; நிஜம். நம்பிக்கையில்லாவிட்டால் இன்றைய மாலை முரசைப் படித்துப் பாருங்கள். மாலை முரசு இணையத்தில் கிடைப்பதில்லை. அதனால் அந்த செய்தியை இங்கே இற்றைப்படுத்தியிருக்கிறேன்.

No comments: