Media in 2005 / 2005-இல் ஊடகங்கள் - அலப்பல், ஆலோலம், அரற்றல்: "மார்ச் மாதம் 1984 இருக்கும். வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணிக்கு சாலைகளில் ஆள் அரவமே இருக்காது. அனைவரும் 'ஒலியும் ஒளியும்' பார்த்துக் கொண்டிருப்பார்கள். கோயில்களில் நிம்மதியாக தரிசிக்கலாம். காய்கறி வாங்கப் போனால் 'எல்லாரும் 8:40க்குத்தான் சார் வருவாங்க' என்று சொல்லி பேரம் கூட பேச மாட்டாள். 45-B பல்லவன் காலியாக செல்லும். கொஞ்ச நாளில் டிடி மெட்ரோ, சன் டிவி, ராஜ் டிவி எல்லாம் வந்துவிட திரைப்பாடல்களின் மவுசு காணாமல் போனது.
இது தெஹல்காக்களின் காலம். சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நெல்லி ப்லை (Nellie Bly) போன்றவர்கள் மாறுவேடம் போட்டுக் கொண்டு அம்பலப்படுத்துவது தொடங்கி விட்டாலும், தொலைக்காட்சிகள் நிறைந்த் இந்தியாவில், இது புதுசு.
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக பதினொன்று எம்.பி.க்கள் பணம் வாங்குகிறார்கள். பங்காரு லஷ்மண், ஜார்ஜ் பெர்னாண்டஸ், லஞ்சம் வாங்கியதை டெஹல்கா வெளிச்சத்திற்கு கொண்டு வந்தபிறகு, சில மாதம் முன்புதான் ஷக்தி கபூர் போன்ற திரைப்படத்துறை சார்ந்தவர்களின் பெண்ணாசையை ஒளிபரப்பினார்கள். போன மாதம்தான் அமெரிக்காவில் 'ஆஜ் தக்' ஒளிபரப்பைத் தொடங்கியது. தற்போது இந்த 'கோப்ரா ஸ்டார்' விவகாரம், அதன் புகழை பரப்ப உதவும். அமெரிக்க ஊடகங்களிடையே பெயர் வாங்கவும் வைக்கலாம்.
அதிகார வர்க்கத்தில் ஊழல் நடக்கும்போது தெஹல்காவுக்கு பங்காரு லக்ஷ்மண் விஷயத்தில் நடந்தது போல தெள்ளத்தெளிவான ஆதாரம் கிடைப்பது அரிது. போபர்ஸ் வெளியாகி பதினெட்டு ஆண்டுகள் முடிந்து வயதுக்கு வந்தபிறகும் யார் லஞ்சம் வாங்கினார்கள் என்பது இன்னும் விளங்கவே இல்லை. ஆண்டின் இறுதியில் வோல்கர் ஆறிக்கை வெளியாகி காங்கிரஸ் ஆட்சியை அசைத்துப் பார்த்தது. ஈராக்கின் "உணவுக்கு எண்ணெய்" பேரத்தில் பலன் அடைந்தவர்கள் பட்டியலில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கே நட்வர் சிங் இருப்பதாக வோல்கர் அறிக்கை சொன்னது. இந்த பேரத்தில் நட்வர், அவரது மகன் ஜெகத் மற்றும் அவரது உறவினர்கள் ஆகியோருக்கு தொடர்புள்ளதா என்று வெளியிட்ட ஊடகங்களின் புலனாய்வுகளால் நட்வர் ராஜினாமா செய்ய வேண்டி வந்தது.
கவர்ச்சிகரமான திருட்டு வீடியோக்கள், பார்வையளனை உற்சாகப்படுத்துகிறது. வெகுஜன ஊடகங்களில் லஞ்சம் அம்பலப்படும்போது மகிழ்ச்சி உண்டாகிறது. கேளிக்கை நிகழ்வாக அமைகிறது. வேறு முறைகளில் இதே செய்தியை அலசும், மக்களுக்கு கொண்டு வரும் வாய்ப்பு இருந்தபோதும், இவ்வாறு ரகசிய கேமிராக்கள் மூலம் பரபரப்பாக்குவது பொது நலனை முன்னிறுத்துவதாக அறைகூவுகிறது. நியாயமான காரணங்கள் இல்லாமல் சினிமாத்தனமாக வெளிப்படுத்துவதன் மூலம் பார்வையாளர்களும் சில சமயம் ஏமாற்றப்படலாம்.
Internet Newsஇணையமும் (internet) சாடிலைட் டிவியும் மக்களின் விரல்நுனியில், விரல்கள் வலிக்குமளவு சுமையுடைய தகவலை உட்கார்த்தி வைத்திருக்கிறது. தீபாவளிக்கு முந்தின நாள் பின்னிரவில், எதிர்த்த வீட்டில், அத்துமீறி லட்சுமி வெடி வெடித்தது முதல் ஸ்லோவேனிய கிராமத்தில் நடந்த கலவரம் வரை அனைத்து செய்திகளும் நேரடியாக கிடைப்பது சுத்தமான சுதந்திரத்தை கொடுக்கிறது. இணையத்தின் மூலம் தனி மனிதனே பத்திரிகை ஆரம்பிக்கவும், கருத்துக்களை அனைவருக்கும் எளிய முறையில் எடுத்து வைக்கவும் முடிகிறது.
சமூகத்தை இணைக்க வேண்டிய வலையே (web) பல சமயங்களில் தீவுகளை உண்டாக்கி, தனி மனித கருத்து என்னும் போர்வையில், சுயநலனுக்காகவும், நிறுவனங்களின் முகமூடியாகவும் வேஷம் கட்டும் வாய்ப்பையும் அமைத்துக் கொடுக்கிறது. சமூகத்தை சீர் செய்வது, குடியுரிமையை நிலை நாட்டுவது என்பதைத் தாண்டி நேர்மையுடனும், பலதரப்பட்ட பார்வையுடனும் செய்திகளைப் பதிவது இதழியல்.
நேற்றைய ஹிந்து தலையங்ககளில் ஆரம்பித்து சன் டிவியின் செய்தி தொகுப்புகளில் தொடர்ந்து இணையத்தின் வலைப்பதிவுகள் (blog) வரை அனைத்து தகவல்களும் தற்போது ஆசிரியரின் கருத்து ஊடுருவல்களோடுதான் வெளிப்படுகிறது. தமிழக ஆளுங்கட்சியின் குறைகளாக, எதிர்க்கட்சி சார்புள்ள சன் டிவி, செய்திகளை பொதுமக்கள் வாயால் கொடுக்கிறது. மத்திய ஆட்சியின் கையாலாகத்தனமாக, தமிழக ஆளுங்கட்சி சார்புள்ள ஜெயா டிவி அதே செய்தியை அலசுகிறது. அமெரிக்காவிலும் இவ்வாறே ஜார்ஜ் புஷ்ஷின் குடியரசு (Republic) கட்சியின் கொள்கைகளை ஆதரிக்கும் நாளிதழ்களும், எதிர்க்கட்சியான சுதந்திர (Democrat) கட்சி நிலைப்பாடை பின்பற்றும் ஊடகங்களும், தேர்ந்தெடுத்தே செய்திகளை வடிகட்டுகிறது.
நாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் செய்திகளை இருட்டடிப்பு செய்வதில் அமெரிக்க வெகுஜன ஊடகங்கள் கர்ம சிரத்தையாக வேலை செய்கிறது.
ஒஹாயோ (Ohio) மாகாணத்தில் தேர்தல் சாவடிகளை நெருங்கக் கூடாது; வாக்காளர்களை விட்டு நூறடி தள்ளி நின்று பயபக்தியோடு பேச வேண்டும் போன்ற குண்டாந்தடி வேலைகள் எட்டாம் பக்க மூலையைக் கூட பிடிக்கவில்லை. இவற்றை வெளிச்சம் போட்டுப் பேசிய லாஸ் ஏஞ்சலீஸ் எம்.பி.யான செனேட்டர் (Senator) பார்பரா பாக்ஸரின் (Barbara Boxer) சட்டசபை உரை லாஸ் ஏஞ்சலிஸ் டைம்ஸின் பதினெட்டாம் பக்கத்தில் குட்டியூண்டாக மறைக்கப்பட்டது. ஆர்வெலின் (Orwell) ஓசியானியா-வில் (Oceania) 2+2 = 5 என்பது போல் ஆ·ப்கன் மற்றும் ஈராக் போர்களின் வெற்றிகள், 9/11-க்கு பதிலடியாக, இஸ்லாமிய தீவிரவாதத்தின் கட்டுப்பாடாக சித்தரிக்கப்படுகிறது.
ரஷியா, சீனா போன்ற நாடுகளில் இது மேலும் பன்மடங்கு பரிமளிக்கிறது. ரஷியாவின் குர்ஸ்க் நீர்மூழ்கி நிஜமாவே தண்ணிரில் மூழ்கி 118 மாலுமிகளைக் கொன்று ஐந்தாண்டுகள் கழிந்தும் எவ்வித மீட்பு சேவை அமைப்பு தொடங்கப்படாததையும், ஹிட்லரின் அட்டூழியங்களை ஒப்புக் கொள்ள மறுக்கும் நாஜித்தனமான ஈரானுக்கு அணு ஆயுத தொழில்நுட்பங்களை விற்பதை கண்டிக்காமல் இருப்பதும், ரஷியாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் சீனாவுக்கு ஆயுதங்களை சகாய விலையில் ஏற்றுமதி செய்வதை வெளிச்சம் பாய்ச்சாமலும் ரஷியப் பத்திரிகைகள் அமைதி காப்பதாக முன்னாள் செஸ் சாம்பியன் காஸ்பரோவ் அமெரிக்க ஊடகங்களில் பேட்டி கொடுக்கிறார்.
அமெரிக்காவின் சுற்றுப்புறச் சூழல் உதாசீனங்களையும், முப்பதாயிரம் பேருக்கு மேல் காவு கொண்ட ஈராக் போர் குறித்தும், முறைகேடான தேர்தல் வாக்கெடுப்புகளையும் அமெரிக்க ஊடகம் முன்வைப்பதில்லை என்று அமெரிக்க ஊடகமே அங்கலாய்க்கிறது. தன்னுடைய அவலங்களை தானே அடையாளம் கண்டு கொண்டு இடித்துரைக்கிறது. அட்லாண்டிக் மந்த்லி, நியு யார்க்கர் போன்ற மிடில் மேகசின்களை விட்டுவிட்டால் கூட நியுஸ்வீக் போன்ற வெகுஜன அமெரிக்கப் பத்திரிகைகளும் ஐரோப்பாவின் கார்டியன் போன்ற நாளிதழ்களும் இவற்றை ஜோராக செய்துவருகிறது.
குறிப்பாக பரீத் சக்காரியாவின் மேற்பார்வையில் வெளிவரும் நியுஸ்வீக்கின் 'அமெரிக்கா ஏன் உலகத்தை அச்சுறுத்துகிறது', 'அமைதிக்கனியை பறிப்பது எப்படி', 'ஏன் நம்மை வெறுக்கிறார்கள்' அட்டைக்கதைகள் குடிமக்களையும் அமெரிக்க ஆட்சியாளர்களை வெகுவாக பாதித்து சென்றடைந்தது. 'நியூஸ்வீக்' அடுத்த படிக்கு சென்று போர்க்கால கைதிகளிடம் இருந்து ரகசியங்களை கறப்பதற்காக 'குருதிப்புனல்' திரைப்படத்தில் பத்ரி(நாசரை)யை கொடுமைப்படுத்துவது போல், புனிதக்குரானை கழிவறையில் கிழித்தெறிந்ததை எழுதியவுடன் பிரச்சினை கிளம்பியது.
பாகிஸ்தானில் இருந்து கிரிக்கெட்டை மறந்த இமரான் கான் குரல் எழுப்பினார். அமெரிக்காவில் இருந்து குடியரசு கட்சியின் பழமைவாத (conservative) வலைப்பதிவர்கள் (blogger) மீண்டும் அணி திரண்டு அடிக்க ஆரம்பித்தார்கள். நியூஸ்வீக் செய்தியை வாபஸ் வாங்கும்வரை ஓயவில்லை.
வலைப்பதிவின் சுதந்திரமான குரல் பாராட்டத்தக்கதுதான் என்றாலும், போராளிக் கூட்டத்தின் தீவிரத்தோடு, அடியாட்கள் போல் ஒருவரை கட்டம் கட்டி தாக்குவதை சில ஆண்டுகளாகவே, செவ்வனே செய்து வருவது பயமுறுத்துகிறது. விமானியாவதற்கு பயிற்சி கூட சரியாகப் பெறாதவர் ஜார்ஜ் புஷ் என்னும் ஆவணம், அம்பலங்கள் ஆனபோது குதித்தது ஆகட்டும்; பாடத்திட்டத்தில் கடவுள் படைத்த ஆதாம், ஏவாள் என்று பூகோளத்தையும் அறிவியலையும் ஆறாயிரம் ஆண்டுக்குள்ளாக சுருக்குவது ஆகட்டும்; ஆணுறை பயன்படுத்தினாலும் எயிட்ஸ் வரும் என்று பொய் ஓதுவது ஆகட்டும்; இதழியலின் குக்கூரலை அமுக்கும் வலைப்பதிவரின் குரல் ஓங்கிதான் ஒலித்து வருகிறது.
தமிழ்ப்பதிவுகளில் சினிமாவும், ஜாதியும், அரசியலும் பெரிதும் அலசப்பட்ட விஷயங்கள். அசோகமித்திரன் கட்டுரை தொகுப்பு வெளியீட்டில் சு.ரா. பேச்சு, சுந்தர ராமசாமியின் மறைவு, கோணல் பக்கங்கள் வெளியீடு, ஜெயமோகன் எது எழுதினாலும் இணையத்தில் இலக்கிய அலசல்கள் ஆயிற்று. திடீர் திடீர் தொடர் மீம் (meme)களாக பிடித்த புத்தகங்கள், பிடித்த வலைப்பதிவுகள் என்று சில ஆக்கிரமித்து, பதிப்பித்த சுவடே தெரியாமல் ஒளிந்துகொண்டது.
வெப்2.0 என்னும் புத்தம் புதிய அரிதாரத்துடன், சமூகத்தை ஒன்றிணைத்து இணையத்தின் சக்தியைத் தாங்கி ஒருங்கிணைக்கும் நிறுவனங்கள் புகழ்பெற்றது. மாற்றுக் கருத்துக்களை பாங்குடன் ஏற்றுக் கொள்வதிலும், பிழைகளைத் திருத்திக் கொள்வதிலும் வெப்2.0 கொள்கைகளில் சில சறுக்கல்கள் காணப்பட்டது. தமிழ் வலைப்பதிவுகளைத் தெரியப்படுத்தும் தமிழ்மணத்தின் தரப்பட்டியலில் குளறுபடி செய்து காட்டுவது, Digg.com-இன் இணைய செய்திச் சுட்டிகளில் தில்லாலங்கடி செய்வது, விக்கிப்பீடியாவில் பிழையான தகவல்கள் என்று கூட்டு முயற்சிகளில் விழும் ஓட்டைகள் தெரியப்படுத்தியது. ஆனால், கொந்தர்கள் என்று அழைக்கப்படுவதற்கு பதில் கருங்காலிகள் என்னும் முத்திரை குத்தப்பட்டு, குற்றம் கண்டுபிடிக்கப்பட்டவர்கள் இருட்டில் ஒதுக்கப்பட்டார்கள்.
ஜனநாயக நாடான அமெரிக்கா, இந்தியா, கனடா போன்ற நாடுகளில் மாற்றுக் குரல்களும், எதிர் வினைகளும், எல்லா தரப்பினரின் கருத்துகளுக்கும் இடம் உண்டு. சீனா, எகிப்து, சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து கொண்டு சுட்டு விரலை தூக்கலாம் என்று தூக்கத்தில் கனவு கண்டாலும், கனாக் கண்டவர்கள் காணாமல் போய் விடுகிறார்கள். எவர், எப்படி, எப்பொழுது கனவு கொண்டார்க்ள் என்பதையும் யாஹ¥ போன்ற மேற்கத்திய நிறுவனங்களே எட்டப்பராக காட்டிக் கொடுக்கிறார்கள்.
எட்டப்பர் என்றவுடன் லூயிஸ் 'ஸ்கூட்டர்' லிப்பியும் (Lewis "Scooter" Libby) அவரின் சகா கார்ல் ரோவும் (Karl Rove) நினைவுக்கு வருவார்கள். ஈராக்கிடம் பேரழிவுக்கான ஆயுதங்கள் இருந்திருக்காது என்னும் உண்மைகளை வேலரி ப்ளேமின் (Valerie Plame) கணவர் கசிய விட்ட்தால், ப்ளேமின் ஒற்றர் என்னும் சுயரூபத்தை 'ஸ்கூட்டர்' லிப்பி போட்டுக் கொடுத்து விட்டார். காட்டிக் கொடுத்த 'ஸ்கூட்டர்' லிப்பியை ஏமாற்றமாட்டோம் என்று ஸ்திரமாக, தங்களுடைய ரகசிய அதிகார வட்டாரத்தை பாதுகாத்ததால், நியு யார்க் டைம்ஸ், டைம்ஸ் வார இதழ் போன்ற முண்ணனி இதழியல் ஆசிரியர்கள் கம்பி எண்ணினார்கள்.
நியு யார்க் டைம்ஸ் நாளிதழின் சந்தாதாரர்களும் விற்பனையும் குறைந்து போனாலும், இணையத்தின் மூலம் சந்தா கட்டி, படிப்பவர்கள் அதிகமானார்கள். இதே மாதிரி இணையத்தின் மூலம் படிக்கக் கிடைக்கும் விகடன்.காம் தளத்தினால் (Vikatan.com website) தமிழர்கள் அதிகம் படிக்கும் நம்பர் ஒன் இதழாக ஆனந்த விகடன் சிம்மாசனத்தை அடைந்தது. காலையில் ஒளிபரப்பாகும் நாலு மணி நேரத்தையே திரும்பத் திரும்ப இருபத்தி நான்கு மணி நேரமும் போட்டுக் காட்டி படுத்துவதால், அமெரிக்காவில் 'விஜய் டிவி' சூடு பிடிக்கவில்லை. நெடுந்தொடர்கள் நிறைந்திருந்தாலும், 'சன்'னின் செய்திகள் முதல் 'நீங்கள் கேட்ட பாடல்' போன்ற வெகுஜன நிகழ்ச்சி வரை சார்பு நிலை பிரதிபலித்தாலும், சன் டிவி நம்பர் ஒன்றாகத் தொடர்கிறது. தினகரன் வாசகர்கள் ஓட்டுப்போட சினிமா விருதுகளை வழங்கியது.
மாவட்ட நிகழ்ச்சிகள், உள்ளூர் தொலைக்காட்சிகள், நாகரிக ஆடை ரசிகருக்கு ஒரு சேனல், அமலா போன்ற பிராணிகளின் நலம்விரும்பிகளுக்கு இன்னொரு சானல் என்று ஊடகங்கள் பல்சுவையை வழங்குகிறது. வலைப்பதிவு மூலம் ஒவ்வொருவரும் எழுத்தாளராகவும் சிந்தனையாளராகவும் அறியப்பட்டது போல் பாட்கேஸ்ட் (Podcast) நுட்பத்தின் மூலம் ஒவ்வொருவரும் ஒலிப்பதிவாளராக ஆனார்கள். ஐ.நா.வின் கோ·பி அன்னான் செய்த ஊழலும் அங்கு பேசப்பட்டது. ஐம்பதை நெருங்கும் பாட்டி மடோனாவின் கெட்ட ஆட்டமும் விமர்சிக்கப்பட்டது. 'கிங் காங்' பட விமர்சனங்களும் செய்யப்பட்டது. ஆக்ஸ்·போர்ட் அகரமுதலியும் பாட்கேஸ்ட்டை சுவிசேஷம் செய்து சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாட்டின் அதிகார அடக்குமுறையில் இருந்தும் ஊடகங்கள் மூச்சுத் திணறினாலும், வெளியில் இயல்பாக, தங்களால் உள்ளடக்க முடிந்த செய்திகளை நம் பார்வைக்குக் கொடுக்கிறார்கள். ஜார்ஜ் பெர்னார்ட் ஷா சொன்னது போல் சைக்கிள் விபத்தை சொல்லும் பாங்குடன் ஜனநாயக வீழ்ச்சியையும், அலட்சியப்படுத்துவது போல் தோன்றினாலும், தங்களின் இருப்பை உணர்ந்து இறுமாப்பு அடையாமல், தனித்திறமையுடன் செயலாற்றுகிறார்கள். நாம் படிக்கும் ஒவ்வொரு எழுத்தும் நம் நம்பிக்கையைக் கோருகிறது. உறுதி பார்க்கபட்ட தகவல்களின் அடிப்படையில் வாசகனின் விசுவாசத்தை அடைகிறது. மாற்று கருத்துகளையும் எதிர் எண்ணங்களையும் சீர் தூக்கி அலசி வாசகரிடம் இருந்து வரவேற்கிறது.
வெப் 2.0 ரிப்போர்ட் செய்யும் இதழியல் துறை - அறிவியல் நோக்கில் அடியெடுத்து வைத்திருக்கும் சாதனை ஆண்டாக 2005 விளங்குகிறது. பரிட்சார்த்த முறையில் பார்வைகளை சீர்தூக்கி முடிவுகளைக் காண்கிறது. பரிசோதனைகளைக் கொண்டு சான்றுகளை அடைந்து தன்னுடைய வாதங்களை புரிந்துகொள்கிறது.
முந்தைய போப், ஜான் பால் II ஜூன் 2000-இல் சொன்னது இன்றும் பொருந்துகிறது:
"இதழியலின் வெளிப்பாடுகள் வெகுஜனங்களின் கருத்தை மாற்றக்கூடியது; சிந்தையைக் கிளறும் செல்வாக்கு உடையது. பொருளாதாரத்தையும், லாபத்தையும், முதலாளிகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அவை செயல்படக்கூடாது. புனிதமான பணியில் லட்சிய தாகத்துடன் நடக்க வேண்டும். பரவலான நன்மைக்காகவே அவர்களிடம் அதிசக்தி வாய்ந்த ஊடகங்கள் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது."
எழுத்தும் தத்துவமும்
1 hour ago
No comments:
Post a Comment