Thursday, September 29, 2005

Bostonil Grahapravesam - Boston Balaji

பாஸ்டனில் கிரஹபிரவேசம் - பாஸ்டன் பாலாஜி (அமெரிக்கா)(பஞ்சாங்கக் குறிப்பு:கிரகப்பிரவேசத்துக்கு வேண்டியவை - தீபம், வினாயகர், இலட்சுமி, சரஸ்வதி படங்கள், பூரணகும்பம், புஷ்பமாலை, மஞ்சள் தாம்பூலம், பால், பழம், நைவேத்தியங்கள், உப்பு, நெல் முதலிய தானியங்கள், சுவர்ணம், வெள்ளி, நவரத்தினம், நவவஸ்திரம், ஆபரணம்.--நன்றி: ஞான ஆலயம் சுபானு வருஷத்தியப் பொதுப் பஞ்சாங்கம்)

'மமோபாத்த... சமஸ்த', சாஸ்திரிகள் மும்முரமாக மந்திரம் சொல்ல,நான் சத்தம் வராமல் தெலுங்குத் திரைப்பாடல்களை முணுமுணுத்தேன்.

இரவு ஒரு மணிக்கு 'நிலாக் காயுது! நேரம் நல்ல நேரம்' என்றுதான் பாடத் தோன்றும். வினோதமான தெலுங்கு சாஸ்திரங்கள் ஒரு தினுசு.கல்யாணம் டு கிருகப்பிரவேசம், எல்லாமே அர்த்தராத்திரி முகூர்த்தம்.

"நெய்யை ஒரு கிண்ணத்தில் எடுத்துண்டு வாங்கோ", சாஸ்திரிகள் அழைத்தார்.விழிக்கும் எனக்குப் பதிலாக, "நீங்க நெய் சொல்லவே இல்லையே?", என என் சகதர்மிணிதான் அவருக்கு இடித்துரைத்தாள்.

"ஹோமம் பண்ணுவதற்கு நெய் இல்லாமல் ஆகாதே!", லிஸ்ட் கொடுக்கும் போது மறந்தாலும், சம்பிரதாயங்களை விட்டுக் கொடுக்காத வாத்தியார்.

மனைவி தப்பிக்கும் வாத்தியாரை மடக்கினாள். "ஆலிவ் ஆயில் இருக்கு. தரட்டுமா"?

தூக்கக் கலக்க வாத்தியார், "எண்ணெய்யில் ஹோ஡மம் வளர்த்தா பீடைதான் பிடிக்கும். இன்னொரு நாள் வைச்சுக்கலாமா?"

என் அம்மா, "இல்லண்டி... சால நல்ல நாள் இன்னிக்கு. சித்த கடைக்குப் போய் வெண்ணெய் பம்பிஸ்தாப்பா", என எனக்கு ஆணையிட்டாள்.

வெளியில் நான்கு மணி நேரமாகப் பனிமழை. காரை சுத்தம் செய்வதற்குள் ஒரு முறை வழுக்கி வேறு விழுந்தேன்.

"ஏன்னா... நல்ல நேரம் போயிடப் போகுது. சீக்கிரம் வாங்கிண்டு வாங்கோ!", என் மனைவி ஏதோ நான் குளிரில் விளையாடுவதாக நினைத்து அவசரப் படுத்தினாள்.

பட்டை பட்டையாய் நெற்றியில் விபூதி, எட்டு முழ பஞ்சகச்சம் மேல், குளிருக்கு ஜாக்கெட் மாட்டி, இருபத்தி நான்கு மணி நேரமும் திறந்து இருக்கும் கடையை புது ஊரில் தேட ஆரம்பித்தேன். வேலை தேடும் மும்முரத்தில், தெரியாத கணிணி மொழிகளையும் தெரியும் என்று டபாய்த்து, சேர்ந்த பிறகு, அதன் help கடலில் மூழ்கி ஒவ்வொரு அட்சரமாகக் கற்றுக் கொள்வது போல், தொலைபேசி அட்டவணை, வரைபடங்களை அலசி ஒரு கடையை கண்டு கொண்டது எனது வண்டி. அந்த அமெரிக்கக் கடைக்குள் இரண்டு மணிக்கு உள்ளே நுழைந்தபோது என் கோலத்தைக் கண்டு பயந்து போனார்கள். செக்யூரிடி சிரித்துக் கொண்டே உள்ளே விட்டாலும், என்னையே கண்காணிப்பது போன்ற உணர்வு.

ஜெயிலில் இருந்து தப்பியவன், அகப்பட்ட உடையை மாற்றி, பனியில் குளித்து,குளிருக்கு ஒதுங்கியது போன்று இருந்திருக்கும் என்னைப் பார்த்த அவனுக்கு. தமிழ்நாட்டில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளைப் போல் ஆயிரக்கணக்கான பெயரில் இருந்த வெண்ணெய், பாலாடைக் கட்டிகளைப் பார்த்து குழம்பிப் போன என் முகம், அவனின் சந்தேகத்தை வலுப்பெற செய்தது.

"May I Help you", என்ற அவனது வழக்கமான கேள்விக்கு, தப்பான பதிலை சொன்னால், ஜெயில் பிரவேசம்தான் அன்று இரவு நடக்கும்.

நேர்முகத் தேர்வில் விடை தெரிந்த கேள்விக்கு, சட்டென்று ஒரு வார்தையில் தப்பான பதிலை சொல்வது போல், உப்பு சேர்க்காத வெண்ணை வேண்டும் என்று கேட்க நினைத்து, மொட்டையாக "Butter" என்றேன். அவனோ சரியான வெண்ணெய்யை கையில் எடுத்து தந்து ஒரு எல்லாம் தெரிந்த புன்னகையுடன் அனுப்பி வைத்தான். நிறைய பின்னிரவு ஆந்திராகாருக்களுக்கு உதவி செய்திருப்பான் போலத் தெரிந்தது. சாஸ்திரிகள், யாருக்குமே ஒழுங்காக பட்டியல் தருவதில்லை என்பதும் மனதுக்கு இனம்புரியாத சந்தோஷத்தைக் கொடுத்தது.

ஒருவழியாக வெண்ணெய் காய்ச்சி நெய் மணத்தது. வீட்டின் புது வண்ண வாசனை மறைந்து நெய் நாற்றம் நிரம்பியது.

"ஒரு கரண்டி கொடுங்கோ", மீண்டும் வாத்தியாரின் பட்டியலில் இடம் பெறாமல் போன பொருள்.

"கரண்டி எல்லாம் பழைய வீட்டில்தான் இருக்கு. நீங்க சொன்ன லிஸ்டில் இல்லையே?", என்று ஒரு ப்ளாஸ்டிக் ஸ்பூன் கொடுக்கப்பட்டது.

நான் ஒரு 'ஸ்வாகா' செய்துவிட்டு, அடுத்த ஸ்வாகாவுக்கு உள்ளே விட்டால், நெய்க்குள் ப்ளாஸ்டிக் ஸ்பூன் ஸ்வாகா ஆகி இருந்தது. ஸ்பூனை எடுக்க உள்ளே கையை விட எண்ணிக் கையை உயர்த்தியபோது, போர் அடிக்கும் தமிழ் படத்தில் வரும் ஆபத்பாந்தவன் விவேக்காக என்னை வாத்தியார் தடுத்தாட் கொண்டார்.

"ஏன் சார்... அறிவிருக்கா? இந்த சூட்டில் கையை உள்ளே விட்டால், கை போயிடுமே?" எனக் கடிந்து கொண்டு, மாவிலையை ஸ்பூனாக்கித் தந்தார். வல்லவனுக்கு மாவிலையும் ஆயுதம்.

ஹோமம் சிறப்பாக செய்ய வேண்டும் என்று எனக்கு ஆசை. நல்ல நேரம் போவதற்குள் நெய் காய்ச்சி ஹோமத்தை ஆரம்பித்து விட வேண்டும் என்று என் மனைவிக்கு ஆசை.ஒழுங்காகக் காய்ச்சாத நெய்யை, நான் அள்ளி விட, வீடே 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' பாடலை மிஞ்சும் விதத்தில் புகைந்தது.

டென்னிசில் ஒரு ஓரத்தில் தேமே என்று பேசாமல் இருப்பவர்கள், முக்கியமான பாயிண்ட்டில் 'அவுட்' என்று தப்பாகக் கத்தி, ஆடுபவர்களை வெறுப்பேத்துவதைப் பார்த்திருப்பீர்கள்.அதில் அவர்களுக்கு ஒரு சுகம். அது போல, எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கிறது, பிரசினை இல்லாமல் முடிந்துவிடும் என்று நினைத்தபோது, நெருப்புப் பிடித்தால் எச்சரிக்கை செய்யப் பொருத்தப்பட்டிருந்த எங்களின் 'ஸ்மோக் அலாரம்' ' புகை உணர்ந்து அலற ஆரம்பித்தது.

பக்கத்து வீடு, எதிர்த்த வீடு விளக்குகள் எரிய, தீயணைப்புப் படை வீரர்கள், அடுத்த செப்டம்பர் பதினொன்றை தவிர்க்கும் நெஞ்சுறுதியுடன் அடுத்த நிமிடம் வீட்டு முன் ஆஜர். எல்லோருக்கும் கதையை சொல்லி அனுப்பி வைத்து, மீண்டும் ஹோமம் தொடர்ந்தோம்.

ஜன்னல் கதவுகளைத் திறந்துவிட்டு, ஃபேன் போட்டால், புகை எல்லாம், அம்ருதாஞ்சனைக் கண்ட தலைவலியாகும் என்று யாரோ மகானுபாவர் சொல்ல, அவ்வாறே செய்தாள் என் மனைவி. என் பேச்சைத்தான் கேட்க மாட்டாள். 'குளிரா, பனியா, மழையா; என்னை ஒன்றும் செய்யாதடி' என்று திரை நாயகர்கள் வேண்டும் என்றால் பாடலாம். முன்புறம் மின்விசிறி, பின்புறம் பனிகாற்று, தலைக்கு மேல் புகையை திசை திருப்ப சேலையால் விசிறும் மனைவி என்று திறந்த மார்புடன் இருந்த என்னை திக்கு முக்காட செய்துவிட்டார்கள். பாசமழையில் நனைவது கேள்விப்பட்டிருக்கிறேன். குளிர் மழையில் கொல்வது அன்று அனுபவித்தேன்.

கீழே வாய் பிளந்த முதலை, மேலே ஆவலாய் புலி, கிணற்றில் விழாமல் பிடித்துக் கொண்டிருப்பதோ பாம்பு என்று தொங்கினாலும், நாக்கில் விழும் தேன்கூட்டின் தேனை சுவைத்தவனாய், ஹோமப்புகையில் குளிர் காய்வது சுகமாய் இருந்தது.

சாஸ்திரிகளும் என் கஷ்டத்தைப் உணர்ந்தவராய், மெகா சீரியல் போல நீட்டிக் கொண்டு போன மந்திரங்களை, ஆங்கிலப் படம் போலக் குறுக்கி முடித்தார். காரணமில்லாமல் இல்லை. அவரும் நானும் மட்டும்தானே, அந்த நள்ளிரவுக் குளிரில் சட்டையில்லாமல், நிராயுதபாணிகளாய் இருந்தோம்.

"ஸ்டவ்வுக்கு பூஜை செய்ய வேண்டும்.ஜாதன் பின் அதில் பால் காய்ச்ச வேண்டும்.", என அடுத்த கட்டளையிட்டார் சாஸ்திரிகள்.

"கேஸ் கனெக்ஷன் வரலியே மாமா?", என்றாள் மணைவி மீண்டும் வருத்தத்துடன். முன்னப் பின்னே, புதுமனை புகுவிழாக்களுக்கு சென்று இருந்தால், இந்த விஷயம் எல்லாம் தெரிந்திருக்கும்.

"மைக்ரோவேவ் இருக்கா?", என்றார், புன்சிரிப்புடன், பலகளம் கண்ட வாத்தியார்.

அடுத்து மைக்ரோவேவ் ஓவனுக்கு பொட்டிட்டு, தூப தீபம் காட்டி பூஜை நடந்தேறியது. நைட் வாட்ச்மேன் சதம் அடிப்பது போல், பாலையும் ஓவனிலேயே காய்ச்சி முடித்தோம்.

வாத்தியார் ஒழுங்காக நடத்திக் கொடுத்த சந்தோஷத்துடன் "அந்தக் காலத்தில் விறகடுப்பு வெச்சிருந்தா... பூஜை செய்தேன். அப்புறம் கே.ஸுக்கு மாறினேள். இப்ப ஓவனில் வந்து நிக்றது... இந்த அக்னி குண்டத்தை வெளியில் வைச்சுட்டா, புகையும் வீட்டுக்கு உள்ளே இருக்காது. அலாரம் பிரசினையும் முடிஞ்சுடும்", என்றார்.

வீரப்பனிடம் இருந்து விடுபெற்ற பிணைக்கைதியாய், ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன், வெளியில் ஹோம குண்டத்தை வைத்தோம். இருபது மைல் காற்றின் வேகத்தில் நாங்களே தள்ளாட, கனல்கள் பறக்க ஆரம்பித்தன. நிலைமை தெரியாமல், என் அன்பு மகன் "C'mon babe...light my fire" என்று சிடி போட்டான்.

ஈராக் போரில் அடிபடும் Friendly fire எனது தெருக்காரர்களுக்கு வராமல் தடுக்க ஆரம்பித்தோம். கோழிக்குஞ்சுகளை அமுக்கி கூடையில் மூடுவது போல், நாங்கள் ஆளுக்கொரு முறத்தை கையில் வைத்துக் கொண்டு, பனிக்கட்டிகளை ஒவ்வொரு நெருப்புக் கனலின் மீதும் தூவி, துரத்தித் துரத்தி அணைத்து முடித்தோம்.

நான் இப்போது கொஞ்சம் பெரிய வீட்டுக்கு மாறிப் போகிறேன். அந்த ராசியான சாஸ்திரிகளைக் கிரகப்பிரவேசத்துக்குத் தேடிக் கொண்டு இருக்கிறேன். தென்பட்டால் எனக்கு சொல்லுங்கள்.

1 comment:

கரவையூரான் said...

உங்கள் கிரகப்பிரவேசம் சம்பந்தமான அனுபவத்தை தற்செயலாக இன்று வாசிக்கக் கிடைத்தது. அடக்கமுடியாத சிரிப்புடன் வாசித்து முடித்தேன். உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளிலும் பொதிந்திருந்த நகைச்சுவை உணர்வு அருமை.